
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மான் கராத்தே', அருள்நிதி நடிக்கும் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' ஆகிய இரு படங்களும் ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக மோத உள்ளன.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா, கிருஷ்ண வம்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை திருக்குமரன் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத் இசை, ஏ.ஆர்.முருகதாஸின் கதை என படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேநாளில்தான் அருள்நிதி, பிந்து மாதவி, அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' திரைப்படமும் திரைக்கு வரவிருக்கிறது. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இப்படத்தினை மோகனா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிட இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து சிம்புதேவன் இயக்கியிருக்கும் படம், டிரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிம்புதேவன் படம் என்பதால் காமெடி சரவெடியாக இருக்கும் என்பதாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் 'மான் கராத்தே' காமெடி படம் என்பதாலும் இரண்டு படத்திற்குமே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவைதவிர ஏப்ரல் 4ம் தேதி எம்.ஆர்.ராஜீவன் இயக்கியுள்ள ‘கூட்டம்’, சிவசண்முகன் இயக்கியிருக்கும் ‘எப்போதும் வென்றான்’, சலங்கை துரை இயக்கியுள்ள ’காந்தர்வன்’ ஆகிய படங்களும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.