Recent Post

90 நாட்களில் 80 படங்கள் ரிலீஸ் : தாங்குமா தமிழ் சினிமா?



90 நாட்களில் 80 படங்கள் ரிலீஸ் : தாங்குமா தமிழ் சினிமா?
எந்த சினிமா விழாவாக இருந்தாலும் புலம்பலுக்கு ஆளாகும் விஷயம், ‘எந்த படமும் ஓடவில்லை. வசூல் குவியவில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை’ என்பதுதான். சம்பந்தப்பட்டவர்கள் இதை பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, ரசிகர்களின் வசதி வாய்ப்புகளை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. சாதாரண மக்கள் தியேட்டருக்கு சென்று, குடும்பத்துடன் படம் பார்ப்பது குறைந்து விட்டது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட எந்த தியேட்டரும் ஹவுஸ்ஃபுல் ஆவதில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நான்கைந்து நாட்கள் மட்டுமே ஓப்பனிங் இருக்கிறது. அதிக தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்வதால், ஓரளவு கையைக் கடிக்காமல் வசூல் பார்த்து விடுகிறார்கள்.

புதுமுகங்கள் நடித்த படங்களின் நிலை பரிதாபம். அந்தப் படங்களைத் தயாரிப்பவர்கள் புதியவர்கள். முன் அனுபவம் இல்லாமை, திட்டமிடாமல் அதிக நாட்கள் ஷூட்டிங் நடத்துவது, நட்சத்திரங்களுக்கு சம்பளத்தை வாரி வழங்குவது என, ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. சென்சார் சான்றிதழ் வாங்கியும் ரிலீசாகாத படங்களின் எண்ணிக்கை 400க்கும் மேல். இதுவரை தமிழ் சினிமா சந்தித்த நஷ்டக்கணக்கு 200 கோடி ரூபாய்க்கும் மேலாக இருக்கும் என்று, சொல்கிறார்கள். இதை பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, பிரச்னைக்கு சரியான தீர்வு என்ன என்பதை யாருமே கண்டுபிடிப்பது இல்லை. புற்றீசல் மாதிரி படங்கள் ரிலீசாவதை கட்டுப்படுத்தவோ அல்லது முறைப்படுத்தவோ முயற்சிக்கவில்லை என்ற புகார், சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதில் ஈகோ நிலவுகிறது என்கிறார்கள்.

முன்பெல்லாம் ஓர் ஆண்டில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100ம், டப்பிங் படங்களின் எண்ணிக்கை முப்பதுமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டில் ஜனவரியில் தொடங்கி மார்ச் முடிவதற்குள், 90 நாட்களுக்குள்ளேயே 80 படங்கள் ரிலீசாகி விட்டன. நேரடி தமிழ்ப் படங்கள், ஆங்கிலம் மற்றும் மலையாளம், கன்னடம், இந்தியில் இருந்து டப் செய்யப்படும் படங்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜனவரியில் இருந்து மார்ச் வரை ரிலீசான படங்களின் பட்டியல் இது. நம்ம கிராமம், அகடம், கும்கி வீரன், ஜெ.சி.டேனியல், விக்ரம் தாதா, என் காதல் புதிது, கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு, அத்திமலை முத்துப்பாண்டி, வீரம், முன் அந்தி சாரல், விடியும் வரை பேசு, ஜில்லா, கலவரம், ரவுடி கோட்டை, சக்தி விநாயகம், மாலினி 22 பாளையங்கோட்டை, கோலிசோடா, 47 சாகச வீரர்கள், நேர் எதிர், நினைத்தது யாரோ, இங்க என்ன சொல்லுது, நினைவில் நின்றவள், ரம்மி, பி.ஏ பாஸ், மாலை நேர பூக்கள், உ, கோவலனின் காதலி, புலிவால், எண்டர்ஸ் கேம், பண்ணையாரும் பத்மினியும், மாதவனும் மலர்விழியும், மிஸ்டர் கோ, ரெட்டை கதிர், போலீஸ் ஸ்டோரி 2013, சந்திரா, டி டே, காதலன் யாரடி, வெண்மேகம், சித்திரை திங்கள், பிரம்மன், பாம்பய், ஆஹா கல்யாணம், மனைவி அமைவதெல்லாம், வல்லினம், பனி விழும் மலர்வனம், வெற்றிமாறன் ஐ.பி.எஸ், பறக்கும் கல்லறை மனிதன், அமரா, தெகிடி, என்றென்றும், 300 பருத்தி வீரர்கள்-பாகம் 2, நாங்கெல்லாம் அப்பவே அப்படி, எதிர்வீச்சு, காதலை உணர்ந்தேன், வீரன் முத்துராக்கு, ஆக்ஷன் கிட்ஸ், நிமிர்ந்து நில், ஒரு மோதல் ஒரு காதல், ஆதியும் அந்தமும், காதல் சொல்ல ஆசை, மறுமுகம், நான் ஸ்டாப், வங்கக்கரை, கேரள நாட்டிளம் பெண்களுடனே, விரட்டு, குக்கூ, சினிஸ்டர், இதயத்தில் ஒருவன், பனி விழும் நிலவு, வெங்க மாம்பா, யாசகன், மறுமுனை, ஒரு ஊர்ல..., நெடுஞ்சாலை, இனம், வேங்கைபுலி, ஏர்பிளேன் வெர்சஸ் வொல்கனோ, வேட்டை (தெலுங்கு டப்பிங்), நீட் ஃபார் ஸ்பீடு என, 79 படங்கள் பட்டியலில் உள்ளன. இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான லிஸ்ட். இன்னும் 9 மாதங்கள் பாக்கி இருக்கிறது.

ஏன் இவ்வளவு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் என்று கேட்டால், பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ நாட்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசாகிறது. எனவே, சிறுபட்ஜெட் படங்களையும், புதுமுகங்களின் படங்களையும் மற்ற வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் செய்வதாக சொல்கிறார்கள். 90 நாட்களில் 80 படங்கள். தாங்குமா தமிழ் சினிமா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)