சென்னை: நடிகை லட்சுமி மேனனுக்கும் தனக்கும் நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்று நடிகர் விஷால் கூறினார். பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனனுடன் இணைந்து நடித்தார் விஷால். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து லட்சுமி மேனனுக்கும் விஷாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இருவரும் மீண்டும் நான் சிகப்பு மனிதனுக்காக ஜோடி சேர்ந்தனர். எனவே இந்த உறவை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது மீடியா. இதற்கிடையில், விஷாலின் சக நடிக நண்பர்கள், லட்சுமி மேனனை கண்ணில் காட்டாமல் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார் விஷால் என பகிரங்கமாகப் பேச ஆரம்பித்தனர். இப்போது எல்லாவற்றும் முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு விளக்கம் அளித்துள்ளார் விஷால். அதில், "தனக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையில் நட்பைத் தாண்டி வேறொன்றும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகை. எனவே தொடர்ந்து என் படங்களில் நடிக்க வைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

