ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் 8 வருடத்துக்கு முன்பே இயக்குனர் ஆனார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கினார். படம் ஃபிளாப். அதன் பிறகு படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு ஒளிப்பதிவு வேலையை மட்டும் பார்த்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சொந்தமாக தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து கோலிசோடா படத்தை எடுத்தார்.
கோலிசோடா ஹிட்டடிக்க விஜய்மில்டன் கவனிக்கத்தகுந்த இயக்குனர் ஆனார். தற்போது பாலாஜி சக்திவேலின் ரா... ரா... ராஜ்குமார் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். அதன்பிறகு விஜய்மில்டன் இயக்கப்போகும் படத்திற்கு இடம் மாறி இறங்கியவன் என்று பெயர் வைத்திருக்கிறார். இதனை அவரது ரஃப் நோட் நிறுவனமும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஹீரோ இன்றுள்ள இளம் ஹீரோக்களில் ஒருவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஹீரோயின் புதுமுகம். கோலிசோடாவில் நடித்த வில்லனும், ஆச்சியும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கோலிசோடாவிற்கு இசை அமைத்தவர்தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார்.