
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஆஷிக் அபு குறிப்பிடத்தக்கவர். மம்மூட்டி நடித்த டாடி கூல் என்ற படத்தில் அறிமுகமானவர் இவர், அதையடுத்து சால்ட் என் பெப்பர், 22 பீமேல் கோட்டையம் என சில ஹிட் படங்களை கொடுத்தார். இந்நிலையில், தனது படத்தில் கதாநாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதையடுத்து, இப்போது கேங்ஸ்டர் என்ற தாதா கதையை படமாக்கிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தனது காதல் மனைவியான ரீமா கல்லிங்கலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறாராம் ஆஷிக்.
22 பீமேல் கோட்டையம் படத்தை இயக்குவதற்கு முன்பு, பல நடிகைகளை பார்த்தபோது ரீமா தான் என் கதைக்கு சூட்டானார். அதோடு அவர் கேமரா முன்பு வந்தபோது, நான் உருவாக்கிய அந்த கற்பனை கதாபாத்திரத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அதனால்தான் அந்த கதையும், கதாபாத்திரமும் பேசப்பட்டது. இப்போது பல மொழிகளில் அப்படம் ரீமேக் ஆகியிருக்கிறது என்றால் அதற்கு ரீமா கல்லிங்கலின் நடிப்புதான் காரணம்.
அந்த வகையில், அடுத்து அவரை வைத்து ஒபானா என்றொரு படத்தை இயக்குகிறேன். இதுவும் சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு தீர்வு சொல்லும் கதைதான். அதற்கு ரீமா கல்லிங்கல்தான் பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரையே நடிக்க வைக்கிறேன். இந்த படம் 22 பீமேல் கோட்டையத்தை விடவும் அவரை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார் ஆஷிக் அபு.