
பெஸ்ட் ரிலீஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.இ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இணைந்து தயாரிக்கும் படம் பள்ளிக்கூடம் போகாமலே.
இதில் நாயகனாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். ஸ்ரீஹரி மனோதத்துவ டாக்டராக வருகிறார். இளம் நாயகன், நாயகியாக தேஜாஸ், ஐஸ்வர்யா ராஜா நடிக்கின்றனர். வில்லனாக புலவர் புலமைபித்தன் பேரன் திலீபன் அறிமுகமாகிறார். ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், ஒ.ஏ.கே.சுந்தர், தேவதர்ஷினி, ஸ்ரீரஞ்சனி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, சிங்கப்பூர் துரைராஜ், ரயில் ரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜெயசீலன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
கல்வி தான் படத்தின் கரு. மார்க் மட்டுமே கல்விக்கான தகுதி கிடையாது. தோல்வி பயத்தில் உயிரை மாய்க்கும் மாணவர்கள் உண்டு. மார்க் வாழ்வை தீர்மானிப்பது இல்லை. தோல்வி என்பது வாழ்க்கை பாடமே தவிர வாழ்வின் முடிவல்ல என்ற கருத்தை உள்ளடக்கிய கதை. தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் மன நிலையை இப்படம் மாற்றும்.
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார், இசை: சாம்சன் கோட்டூர், நடனம்: காதல் கந்தாஸ், ராஜு சரண்யா, ஹபீப், தயாரிப்பு மேற்பார்வை: டி.வி.சசி, நிர்வாக தயாரிப்பு: திவ்யா நீருகட்டி.