பீட்சா படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் வந்திருக்கும் மேலும் ஒரு த்ரில்லர் படம்தான் ஆதியும் அந்தமும்.
டாக்டர் அஜய்(கரண்) ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. எனவே, அந்த மருத்துவமனையில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக உணர்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குகிறார்.
அதே வேளையில் கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார். இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல் சந்தேகப்படுகிறார்கள். இந்நிலையில் அஜய், காணாமல் போக கல்லூரி முதல்வர்தான் காரணமென அவரிடம் போய் கேட்கிறார் காம்பியர். அஜய் திரும்ப கிடைத்தாரா? அவரை ஏன் கல்லூரி நிர்வாகத்தினர் தடுக்கிறார்கள்? அந்த ஆவியின் பின்னணி என்ன? அது ஏன் அஜய் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது? என பல சஸ்பென்ஸ் கேள்விக்களுக்குப் பதிலாக திரையில் திரைக்கதையாக விரிகிறது ‘ஆதியும் அந்தமும்’.
இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. இரண்டாம் பாதி படமோ முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட ஃப்ளாஷ்-பேக் வருகிறது படத்தில். இதை சுருக்கியிருந்தால் இரண்டாம் பாதி தொய்வினைக் குறைத்திருக்கலாம். இடையில் நாயகன் நாயகி டூயட் வேறு வருகிறது.
அஜய், ‘கோலங்கள்’ சீரியலின் வில்லன். இந்தி உச்சரிப்பு தொனியில் வசனம் பேசும் பழக்கத்திலிருந்து அஜய் எனும் கெளரவ் கபூர் முழுவதுமாக மாறவில்லை. டாக்டர் கரண் பாத்திரம் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. திரைக்கதையின் பலவீனத்தால் மித்தாலி அகர்வாலுடனான காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை.
படத்தில் ஒலி ஒளியைத் தவிர்த்து மிரட்டும் இன்னொரு நபர் யுவான் சுவாங். அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது அவரது பாதி முகத்தில் தெரியும் ஒளியும் பாவனைகளும் கூட முதற்பாதியின் விறுவிறுப்பைத் தக்கவைக்க உதவுகிறது. டி.வி. தொகுப்பாளினியாக வரும் கவிதா ஸ்ரீனிவாசனும், ஹாஸ்பிட்டல் சீஃப்பாக வரும் ராமநாதனும் நிறைவாக நடித்துள்ளனர்.
L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம்.
கெளஷிக்கின் முதல் படமிது என சொல்லவே முடியாது. கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம், படத்தின் முதற்பாதி திரைக்கதை, படத்தின் எதிர்பாராத முடிவு என இயக்குநராக கெளசிக் கலக்கியுள்ளார்.
மொத்தத்தில் ஆதியும் அந்தமும் திகிலான திரைப்படம்.