
கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விருது விழாவில் குட்டி படத்தை இயக்கிய ஜானகி விஸ்வநாதன் மட்டுமே தமிழ் இயக்குனராக விருது பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு 20 படங்கள் போட்டியிட்டன. மூடர்கூடம், பண்ணையாரும் பத்மினியும் படங்களும் போட்டியிட்டது. இயக்குனர் வசந்த், நடிகை குஷ்பு, எட்டிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் நடுவர்களாக இருந்து படங்களை தேர்வு செய்தனர்.
இதில் 2013ம் ஆண்டுக்கான சிறந்த முதல் படம் இயக்கிய விருது கியான் கொரியாவுக்கு வழங்கப்படுகிறது. இவர் தி குட் ரோட் என்ற குஜராத்தி படத்தை இயக்கியதற்காக இந்த விருதை பெறுகிறார்.
இந்தப் படத்தின் கதை ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது. குடும்ப வறுமை காரணமாக இன்சூரன்ஸ் பணம் தன் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காத தான் ஓட்டும் லாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு செத்துப்போக செல்கிறார் ஒரு டிரைவர். நகரத்தில் கொத்தடிமையாக இருந்து தப்பித்த ஒரு சிறுவன் அதே லாரியில் ஏற்றி அனுப்பப்படுகிறான். டூர் சென்று விட்டு திரும்பும் ஒரு பணக்கார குடும்பத்தின் ஒரு குழந்தை வழி தவறுகிறது. அந்த குழந்தையும் அந்த லாரியில் தஞ்சம் அடைகிறது. இதன் பிறகு லாரி டிரைவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
வருகிற ஆகஸ்ட் மாதம் 12ந் தேதி மியூசிக் அகாடமியில் நடக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.