
சேது படத்தில் இயக்குனரானவர் பாலா. அதையடுத்து, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் நடித்த ஒவ்வொரு ஹீரோக்களையுமே தனது கதாபாத்திரத்திற்கேற்ப உருமாற்றினார். அந்த வகையில், விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் போன்ற நடிகர்களை எக்கச்சக்கமாக மாற்றி அவர்களுக்கு நல்லதொரு அடையாளத்தையும் கொடுத்தவர் பாலா.
அப்படிப்பட்டவரின் கையில் இப்போது சசிகுமார் சிக்கியிருக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் அப்படத்திற்காக சசிகுமாரை செதுக்கிக்கொண்டிருக்கிறார் பாலா. அதன் முதல்கட்டமாக அவருக்கு கரகாட்ட பயிற்சியை கொடுத்து வந்தவர், இப்போது தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த கரகாட்ட கலைஞனாக சசிகுமாரை உருவகப்படுத்த தாடி, மீசையை நீக்கி அவரை புதுவித கலை ஞனாக்கியிருக்கிறார்.
இதற்கிடையே இதுவரை படத்தின் தலைப்பை பற்றி எந்த தகவலையும் வெளியில் கசிய விடாமல் இருந்து வந்தார் பாலா. ஆனால் தற்போது அந்த படத்திற்கு தாரை தப்பட்டை என்று அவர் பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே ராமராஜன்-கனகாவுக்காக மாங்குயிலே பூங்குயிலே என்று பாட்டெடுத்த இளையராஜாவும், தனது கிராமிய மணம் பரப்பும் பாடல்களை சசிகுமார்-வரலட்சுமிக்காக மெட்டெடுக்கும் பணியில் தற்போது தீவிரமடைந்திருக்கிறாராம்.