
முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ந.ராயன் இயக்கும் புதிய படம் ‘அழகிய பாண்டிபுரம்’. இப்படத்தை தாய் மண் புரொடக்ஷன் சார்பில் ந.கிருபாகரன் தயாரிக்கிறார். இப்படத்தில் அறிமுக நாயகன் இளங்கோ நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கானகம், எதிர்விசை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, பஞ்சு சுப்பு, மீராகிருஷ்ணன், பாத்திமா பாபு, யுவராணி, கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்வாஜ் இசையமைக்கிறார். அகிலன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, “நமது வீட்டுக்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை நேசிக்கணும், அவர்களோடு நட்பாக இருக்கணும். ஈகோவினால் அனைவரிடமும் பகையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாக்கி வருகிறேன்” என்றார்.
இப்படத்தில் நாயகன் இளங்கோவுடன் ரிஷா இணைந்து ‘ஓரக் கண்ணாலே உத்து உத்து பார்த்து’ என்ற பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடனமாடியிருக்கிறார். அதே போன்று ‘கட்டழகி நானப்பா கொட்டி வச்ச தேனப்பா’ என்ற பாடல் காட்சியில் இளங்கோவுடன் இந்தி நடிகை ஆக்னஸ் படு கவர்ச்சியாக நடனமாடியிருக்கிறார். இதைத்தவிர நாயகி சம்பந்தப்பட்ட காதல் காட்சி, பாடல் காட்சிகளுக்காக தேனி, காரைக்குடி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது.