Recent Post

புதிதாகச் செய்ய வேண்டும்!



இனம்’ படத்தின் மூலம் மீண்டும் இதயம் தொட வருகிறார் சந்தோஷ் சிவன். புன்சிரிப்பும், பூங்கொத்து சகிதமாக சந்தோஷச் சாரல் தெறிக்கிறது அவரின் ஒவ்வொரு வார்த்தைகளிலும்… பத்மஸ்ரீ விருது கிடைத்ததால் இந்த நொடியும் வாழ்த்து தோரணங்களால் அவரின் மனம் நிறைகிறது…
பத்மஸ்ரீக்கு வாழ்த்துக்கள் சார்…?
ஆமாம்… பெரிய கௌரவம் கொடுத்துவிட்டார்கள். என் நியாயமான காத்திருத்தலுக்கு கிடைத்த நேர்மையான ஆசீர்வாதம் இது. நீங்கள் சினிமாக்களில் பார்த்த என் பங்களிப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்னைக் கவர்ந்த ஒரு கதை. அதை நேர்த்தியுடன் சொல்லி என்னை அதற்குள் இழுத்த இயக்குநர். நடிகர்கள், என் கேமரா மொழியை புரிந்து கொண்ட ரசிகர்கள் என மற்றவர் பங்களிப்பு ஏராளம். ஒரு விதத்தில் எனக்கு கிடைத்த எல்லாப் பூச்செண்டுகளும் அந்த பங்களிப்புக்குதான் போய் சேர வேண்டும்.
என்ன… தமிழ்நாட்டுப் பக்கம் அடிக்கடி பார்க்க
முடிகிறது…?
24 வருடங்களாக நான் இங்கேதான் இருக்கிறேன். என் நண்பன் ஒருவன், ஈழத்தமிழன். ஒரு நாள் அவன் வீட்டுக்கு போயிருந்த போது, அவன் மனைவி, மகள் என அத்தனை கண்களிலும் மகா சோகம். ராஜபக்ஷே போட்ட குண்டுகளால் நிலத்தையும் வாழ்க்கையையும் இழந்து வந்த உறவுகள் அவர்கள். அந்த கண்களில் இருந்த சோகத்துக்கு காரணங்கள் நிறைய இருந்தன. அவற்றைப் பின் தொடர்ந்து போன போது, என் மனசு முழுக்கவும் கனம். கவலையோடு சேர்ந்து கோபமும் வந்தது. அதுதான் “இனம்’. அதை இயக்கும் போது ஒரு வித வலியோடு இருந்தேன். சரி ரிலாக்ஸ்டா ஒரு படம் செய்யலாம் தோன்றியது. அதுதான் “அஞ்சான்’. “இனம்’ நிச்சயம் வேறுபட்ட சினிமாவாக இருக்கும். நான் நல்ல சினிமாவுக்காக பெரிய பெரிய மெனக்கெடல்களைச் சந்திப்பேன். ஈழம் சென்று இதைப் படம் பிடிக்க ஆசை. ஆனால் முடியவில்லை. மனித குணங்களின் வேறு ஒரு பரிமாணம் காட்டுகிற படம் இது. “இனம்’ என்கிற தலைப்பு வெவ்வேறு செய்திகள் தரலாம். ஆனால் ஈழப் போர் பின்னணியாகத்தான் இருக்கும். உணவு, உணர்வு, ருசி, காதல், அன்பு என சக மனித உணர்வுகளைப் பின் தொடரும் கதை இது.
“உருமி’ உதாரணப் படம்… ஆனால் அதற்கான வரவேற்பு இங்கே சுமார்தான்…. பெரிய மெனக்கெடல்களுடன் வருகிற படங்கள் தோற்கும் போது எப்படியிருக்கும்…?
சினிமா பக்கா பிசினஸ். ஆனால் அதையும் தாண்டி தேடல் நிறைந்து கிடக்கும் சாதனம் அது. ஆரம்பத்தில் நல்ல கதைகளுடன் சினிமாவுக்கு வருகிறவர்கள், கமர்ஷியல் பக்கம் திரும்புவதற்கு சினிமாவின் லாப, நட்ட கணக்குகள்தாம் காரணம். எனக்குள் இருக்கும்
கேமராமேன்தான், இயக்குநராக தயாரிப்பாளராக நான் அடையும் நஷ்டங்களை ஈடு கட்டுகிறான். நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சமூகத்துக்கு கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில்தான் நான் படம் இயக்குகிறேன். “உருமி’ இன்னும் பெரிய இடத்துக்குச் சென்றிருக்க வேண்டிய படம்தான். ஆனால் அதை பலரும் ஒரு மலையாளப் பதிவாக பார்த்தது தவறு. தமிழில் இன்னும் அந்த படத்தைக் கொண்டாடி இருக்கலாம் என தோன்றுகிறது. மலையாள சினிமாவாக முதலில் வந்து விட்டதால், டி.வி.டி, திருட்டு சி.டி எனரசிகர்கள் பிரிந்து விட்டார்கள். அப்படி இருந்தும் தியேட்டருக்கு வந்து பார்த்தவர்கள் அதிகம். கலையில் சாதித்தவர்கள் எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் விஷயம் எது?வென ஒருவர் கேட்டார். “உருமி’ மாதிரி இப்போது எடுத்து முடித்திருக்கிற “இனம்’ மாதிரி இன்னும் 15 கதைகள் என்னிடம் இருக்கின்றன. அதை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று சொன்னேன். எப்போதைக்கும் என்னிடம் உள்ள பதில் இதுதான்.
“அஞ்சான்’ எந்த அளவுக்கு வந்திருக்கிறான்…?
ஒவ்வோர் இயக்குநரும் ஒவ்வொரு விதம். ஸ்பெஷல் டெக்னிக்கை கொண்டு வருவதில் ஒருவர் புதுமை காட்டுவார். ஒருவர் ஆக்ஷனில் இறங்கி அடிப்பார். காதல், அன்பு என ஒருவர் உருக வைப்பார். இதெல்லாம் ஒரு சேர ஒருங்கிணைத்து கதை சொன்னார் லிங்குசாமி. பெண்களுக்கும் பிடிக்கிற மாதிரியான கதை. “அஞ்சான்’ லிங்குசாமியையும், சூர்யாவையும் அடுத்த லெவலுக்குக் கொண்டு போய் மனதில் நிறுத்துகிற கதை. ஏற்கெனவே செய்த வேலையைத் திரும்பத் திரும்ப செய்ய எனக்கு பிடிக்காது. ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்பது என் குணம். அதற்காக எந்த உழைப்புக்கும் தயாராக இருப்பேன். அதை தெளிவாக கொண்டு வந்திருக்கிறார் லிங்குசாமி.
பாலுமகேந்திரா மறைவு பற்றி?
ஒரு கவிதையிலோ, புகைப்படத்திலோ பதிந்து விட முடியாத சோகம் அது. தமிழ் சினிமாவை கடந்த நூற்றாண்டில் முன்னெடுத்து வந்ததில் பாலுமகேந்திரா சாருக்கு பெரும் பங்கு உண்டு. “மூன்றாம் பிறை’, “சந்தியா ராகம்’ என என் பள்ளி பருவத்து நாள்களில் சினிமா ஆசையை விதைத்தவர் பாலுமகேந்திரா. பார்க்கும் போதெல்லாம் “”சந்தோஷ் இன்னும் பெருசா எதிர்பார்க்குறேன்” என ஆசையாகப் பேசுவார். ஒரு வருடத்துக்கு முன்பு ஒரு விருது விழாவில் பார்த்தேன். மேடையேறி விருது பெற்றவர் என்னை பற்றியே நிறையப் பேசினார். அத்தனை பெரிய பிரபலங்கள் இருந்த அரங்கில் எனக்கு பெரிய கௌரவம் கொடுத்தார். “”இனி யங்க்ஸ்டர்தான் இந்த சினிமாவை எடுத்துட்டு போகணும்”ன்னு அடிக்கடி சொல்லுவார்.
செய்தி- ஜி.அசோக்

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)