Recent Post

‘காவியத்தலைவன்’




kaaviyathalaivan“வெயில், அங்காடித் தெரு, அரவான்” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதிய படம் ‘காவியத்தலைவன்.’
வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படம் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளையும், சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற ஒரு படம். அப்படம் இந்தியன் பனோராமாவிற்கு தேர்வு செய்யப்பட்டதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.
உலக அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில், சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது. உலக அளவிலான பல்வேறு குழந்தை நல அமைப்புகள் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்ற கருத்தை வெயில் திரைப்படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது என்று தங்களின் பிரச்சாரப்படமாக வைத்துள்ளது. ‘வெயில்’ திரைப்படம் எஸ்ஆர்எம் திரைப்படக்கல்லூரியில் ஒரு திரைப்படப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
‘அங்காடித் தெரு’ திரைப்படம் மூன்று ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றதோடு இந்தியன் பனோரமாவிற்கும் தேர்வு செய்யப்பட்டது. பாண்டிச்சேரியில் சிறந்த திரைப்படத்திற்கான அரசு விருது பெற்றது. ஆஸ்கார் விருதுக்கான இந்தியத் திரைப்படமாக கடைசி வரையிலும் தேர்வில் இருந்த படம்.
“வெயில், அங்காடித் தெரு, அரவான்” படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் புதிய படம் ‘காவியத் தலைவன்.’
‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். தமிழில், “காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா திரைப்படங்களைத் தொடர்ந்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காவியத் தலைவன்.’
“காளை, முனி, சக்கரக்கட்டி, பரதேசி” திரைப்படங்களில் நடித்த வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னொரு கதாநாயகியாக பிரபல இந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனைக்கா சோட்டி  நடிக்கிறார்.
மிக முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயனாக இருக்கும் பிருத்விராஜ் நடிக்கிறார். இவர் தமிழில் “மொழி, கனா கண்டேன், ராவணன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா” முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை, இணை கதாபாத்திரங்களில் நாசர், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, அழகி ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கும், பிற இயக்குனர்களுக்கும் அதிகம் இசையமைக்க ஒத்துக் கொள்ளாத, ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு, இது நாட்டுப்புற  இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென இசையமைக்க சம்மதித்ததோடு, தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.
“பில்லா, போக்கிரி, எங்கேயும் காதல், மதராசப் பட்டினம், தெய்வத் திருமகள், வேட்டை, தாண்டவம், தலைவா,” இந்தி திரைப்படங்களான ”தூம் , வாண்டட், வாரணாசி” போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
“புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி , தெய்வத் திருமகள்” போன்ற திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சந்தானம் இப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிகிறார்.
“அங்காடித்தெரு, நான் கடவுள், நீர்ப்பறவை, கடல்” போன்ற படங்களுக்கு வசனக்கர்த்தாவாக பணிபுரிந்த பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தின் உரையாடலை எழுதுகிறார்.
தேசியவிருது பெற்ற எடிட்டர் கே.எல் பிரவின் இப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.
படத்தின் பாடல்களை காவியக்கவிஞர் வாலி, பா.விஜய், நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
மறைந்த கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கடைசிப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் காவியத்தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்தின் நடன அமைப்பை பிரபல நடன இயக்குனர்களான ரகுராம், சிவசங்கர், ராஜு சுந்தரம், சின்னி பிரகாஷ் அமைத்துள்ளனர். சண்டை வடிவமைப்பை பிரபல சண்டைவடிவமைப்பாளர் தியாகராஜன் கவனிக்கிறார்.
நிரஞ்சனிஅகத்தியன், பெருமாள் செல்வம் ஆடை வடிவமைப்பை கவனிக்க, தேசிய விருது பெற்ற பிரபல மலையாள ஒப்பனைக் கலைஞர் “பட்டணம்” ரஷீத் ஒப்பனையை கவனிக்கிறார்.
இணை தயாரிப்பாளராக  சுந்தர்ராஜூம், மக்கள் தொடர்பாளராக நிகில் முருகனும், தயாரிப்பு மேற்பார்வையாளராக முத்துராமலிங்கமும், தயாரிப்பு நிர்வாகத்தை சுந்தரும் கவனிக்கிறார்கள், புகைப்படக் கலைஞர்  R.S. ராஜா.
“தமிழ்ப்படம்’, ’வ’, ’காதலில் சொதப்புவது எப்படி?’’ படங்களைத் தொடர்ந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
காரைக்குடி, தென்காசி, வாரணாசி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்தவண்ணம் உள்ளது.
மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)