
மான் கராத்தே இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் எனப்படும் குண்டர்களை நான் நியமிக்கவில்லை. அந்த அளவுக்கு நான் வசதியானவன் இல்லை என்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்- எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் அரங்கில் நடந்தது. விழாவிற்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தபோது ‘பவுன்சர்கள்' என்று சொல்லப்பட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குண்டர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள். இதனால் சிவகார்த்திகேயன் அடியாட்கள் வைத்து மீடியாக்காரர்களை சிரமத்துக்குள்ளாக்கியதாக செய்தி பரவியது. மேலும் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினியே உதவியாளர் கூட இல்லாமல் எளிமையாக தன் கோச்சடையான் விழாவை நடத்திய நிலையில், வளரும் நடிகரான சிவகார்த்திக்கு இது தேவையா என்றும் கேள்வி எழுந்தது.
இதற்கு செய்தியாளர்களை அழைத்து மறுப்பு தெரிவித்த சிவகார்த்திகேயன், தனக்கும் அடியாட்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தார். தான் அந்த அளவுக்கு வசதியானவன் இல்லை என்றும் தன் சம்பளம் அந்த அளவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் கூறுகையில், "பவுன்சர்களை நியமித்தது நாங்கள்தான். விழாவிற்கு நிறைய பிரமுகர்கள், ரசிகர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவே இவ்வாறு ஏற்பாடு செய்தேன். ஆனால் அது வேறுமாதிரியாக மாறிவிட்டது. இனிமேலும் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்," என்றார்.