திருவனந்தபுரம்: இயக்குநர் சமுத்திரக்கனி நடித்துள்ள மலையாளப் படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகள்‘ கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக உள்ளதால், அப்படத்திற்கு தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது. கேரளாவில் வரும் ஏப்ரல் 10ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் மலையாள நடிகர் இன்னசென்ட் போட்டியிடுகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில மலையாள படங்களின் போஸ்டர்கள், அவரது தொகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறி தேர்தல் ஆணையத்திடம் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் புகார் கொடுத்தது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இந்நிலையில், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் புதிய மனு ஒன்றை தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளது.



