
தமிழில் முனி, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்த வேதிகாவுக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் சினிமாவே வேண்டாமென்று தெலுங்கு படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோதுதான், எதிர்பாராதவிதமாக டைரக்டர் பாலாவின் அழைப்பு பரதேசி படத்துக்காக சென்றது. இதனால், தமிழில் அடுத்து தனக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் ஓட்டமாக ஓடிவந்து அந்த படத்தில் கமிட்டானார் வேதிகா.
அதோடு, கதாபாத்திரமாகவே மாறி நடித்துக்காட்டினார். அதைப்பார்த்துதான் அதையடுத்து தான் இயக்கிய காவியத்தலைவன் படத்திற்கு வேதிகாவை ஒப்பந்தம் செய்தார் வசந்தபாலன். இருப்பினும், அதற்கடுத்து தமிழில் அவருக்கு படம் இல்லை. அதனால், ஏற்கனவே மலையாளத்தில் திலீப்புடன் சிருங்கார வேலன் என்ற படத்தில் நடித்தவர் என்பதால், அந்த பழக்கத்தைக்கொண்டு மீண்டும் கேரளாவுக்கு விசிட் அடித்த வேதிகா, குஞ்சாக்கோ போபன் நடிக்கும் கசின்ஸ் என்ற படத்தை கைப்பற்றியுள்ளார்.
இதுவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளாக நடித்திருக்கும் வேதிகாவுக்கு, இந்த படத்தில் நல்லதொரு குடும்பத்தலைவி வேடமாம். குடுமபத்தில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சலசலப்பு, பரஸ்பரம் இதைதான் கதை பண்ணியிருக்கிறார்களாம். அதனால் இதன்பிறகு தனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் மலையாளத்தில் கிடைக்கும் என்று, சில மாதங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த வேதிகா இப்போது கேரளாவுக்கு முகாமை மாற்றிவிட்டார்.