பெஸ்ட் ரிலீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டாக்டர்.S.E.P தம்பியுடன் இணைந்து எஸ்.மகேஷ் தயாரிக்கும் படம் “பள்ளிக்கூடம் போகாமலே”. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கிறார். அவர், அசிஸ்டென்ட் கமிஷ்னர் வேடத்தில் தோன்றுகிறார்.
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்நிலையில் தற்போது ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்ற படத்திலும் அவருக்கு காக்கி யூனிஃபார்மை கொடுத்து அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயசீலன். தேஜாஸ் என்பவர் இளம் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ஐஸ்வர்யாராஜாவும் அறிமுகமாகிறார்கள். தேஜாஸ் மலையாளத்தில் பல படங்களில் நடித்த வில்லன் அலெக்ஸின் மகன். இதுதவிர வில்லனாக புலவர் புலமைபித்தன் பேரன் திலீபன் அறிமுகமாகிறார்.
இன்னொரு சிறப்பம்சமாக இந்தப்படத்தில் ‘மாவீரன் ஷேர்கான்’ ஸ்ரீஹரி மனோதத்துவ டாக்டராக நடித்திருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு முழுமையாக நடித்துக்கொடுத்த படம் இது. இந்தப் படத்தை ஜெயசீலன் எழுதி இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…கல்விதான் பள்ளிக்கூடம் போகாமலே படத்தின் கரு! ஆசிரியர் போடும் மார்க் மட்டுமே கல்விக்கான தகுதி கிடையாது…தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் பலர் உண்டு.மார்க் மட்டுமே வாழ்கையை தீர்மானித்து விடுவதில்லை கல்வி உயிரை விட பெரிதல்ல தோல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பாடமே தவிர அதுவே வாழ்கையின் முடிவு கிடையாது என்கிற கருத்தை உள்ளடக்கிய கதை!
தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் மனநிலையை இந்தப் படம் போற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்றார் ஜெயசீலன்.