
ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப் போறவர் கே.எஸ்.ரவிகுமார்தான் என்பதை அனைவரும் அறிவர்.
2004ல் ‘ஜக்குபாய்’ மற்றும் 2011ல் ‘ராணா’ என இரண்டு படங்களை ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கே.எஸ்.ரவிகுமாரை விட்டு கைநழுவி போயிற்று. ‘ஜக்குபாய்’ போஸ்டர் அறிவிப்புடன் நின்றுபோனதென்றால் ‘ராணா’ பூஜை வரை வந்து நின்றுவிட்டது. அதனால கோச்சடையான் படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் அனுஷ்கா மற்றொருவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இதில் அனுஷ்காவின் கால்ஷீட் ஓகேயாகிவிட்டதாம். ஆனால் சோனாக்ஷி சின்கா கால்ஷீட் மட்டும் கொஞ்சம் இழுபறியில் உள்ளதாம். அதனால தொடர்நது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் கதை, வசனத்தை பொன். குமரன் எழுதுகிறார். பிரியாமணி நடிப்பில் சாருலதா என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த பொன்.குமரன். ஆனால் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருப்பவர் கே.எஸ்.ரவிகுமார். எந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
கன்னடத்தில் பிரபலமான தயாரிப்பாளரும், தமிழில் மஜா போன்ற படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. கோச்சடையான் படத்தின் வெளியீட்டு தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தன் அடுத்தப் படத்தை உடனே துவங்குகிறார் ரஜினி. காரணம், கோச்சடையான் வெளியீட்டிற்கு முன்பாக அந்தப் படத்திற்காக ஆரம்ப முதலீடு செய்த ஈராஸ் நிறுவனத்துக்கு ரூ.50 கோடி வழங்க வேண்டுமாம். அதை வழங்குவதற்காகவே உடனடியாய் புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டாராம்.