Recent Post

பிரபல ஹிந்தி திரைப்பட கவிஞர் குல்ஜாருக்கு பால்கே விருது




2013-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெற பிரபல ஹிந்தி திரைப்படக் கவிஞர் குல்ஜார் (79) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய செய்தி, ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய சினிமாவின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. 2013-ஆம் ஆண்டுக்கான 45-ஆவது தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஹிந்தி கவிஞர் குல்ஜார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ் விருது "தங்க தாமரை', ரொக்கம் ரூ. 10 லட்சம், சால்வை ஆகியவற்றை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு: சம்பூரண் சிங் கல்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட குல்ஜார், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1934-இல் பிறந்தார். பின்னாளில் "குல்ஜார் தீன்வி' என்ற புனைப்பெயரை ஏற்றார். திரைப்படக் கவிஞராக பிமல் ராய் இயக்கத்தில் "பந்தினி' திரைப்படத்தில் 1956-இல் அறிமுகமானார்.
முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சச்சின் தேவ் பர்மன், சலீல் செளத்ரி, சங்கர்-ஜெய்கிஷன், ஹேமந்த் குமார், லட்சுமிகாந்த் - பியாரேலால், மதன் மோகன், ரோஷன், ராகுல் தேவ் பர்மன் முதல், இன்றைய தலைமுறை ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், சங்கர்-எஸான்-லாய் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், விஷால் பரத்வாஜ் ஆகியோரது இசையிலும் இவர் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்.
திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதுடன், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் உள்ளார் குல்ஜார். இவர் இயக்கிய திரைப்படங்களான "மேரே அப்னே', கோஷிஷ்', "ஆந்தி', "கினாரா', "குஷ்பூ', "அங்கூர்', "லிபாஸ்', "மீரா', "லேகின்', "மாச்சிஸ்' ஆகியவற்றுக்கு பல்வேறு தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சின்னத்திரைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். "மிர்ஸா காலிப்', "தரீர் முன்ஷி பிரேம்சந்த் கீ' ஆகிய தொடர்களுக்கு பாடல் எழுதியுள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "ஹலோ ஜிந்தகி', "பொட்லி பாபா கீ', "ஜங்கல் புக்' உள்ளிட்ட தொடர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
ஆஸ்கர் விருது: 2002-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, 2004-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது, சினிமாவுக்கான தேசிய விருதுகள், 20 பிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ளார். 2008-ஆம் ஆண்டு "ஸ்லம் டாக் மில்லியனேர்' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஜெய் ஹோ' பாடலுக்காக ஆஸ்கர் விருதை குல்ஜார் பெற்றுள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)