
வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புதுப்புது பிரசார யுக்திகளை கையாள்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் பேன்டு வாத்திய இசை, அதிர்வேட்டுகள், பாடல்கள். ஆட்டம், பாட்டம் என்று தெரு தெருவாய் கலக்குகிறார்கள்.
பெருமளவில் மக்களை கவர வேண்டும். அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற கவலை அவர்களுக்கு. வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும் என்ற கவலை தேர்தல் ஆணையத்துக்கு. அவர்களும் பலவிதமான விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் களத்தில் புகுத்தி வருகிறார்கள்.
‘ஓட்டு போட்டா என்ன? போடாட்டி என்ன?’ என்று வாக்களிப்பதை பலர் தட்டிக்கழிப்பதால் ஓட்டு பதிவு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைகிறது. கடந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது.
இதனால் இந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் குறிவைத்து களம் இறங்கி இருக்கிறது. இதற்காக நடமாடும் பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் முன்பு டிஜிட்டல் திரையில் நடிகர் கமலஹாசன், கவுதமி, ரோகிணி ஆகியோரின் ‘வாய்ஸ்’ ஒளிபரப்பப்படுகிறது.
‘ஜனநாயக கடமையை சரிவர ஆற்றுங்கள்’ என்ற தங்களுக்கே உரித்தான ஸ்டைலில் அவர்கள் பேசும் உரையாடல் மக்களை கவர்கிறது. அந்த வாகனத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிந்து கொள்ளும் எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனத்தை தேர்தல் அதிகாரி அருண் சுந்தர் தயாள் தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் கூடும் இடங்கள், மால்கள் ஆகிய பகுதிகளில் வலம் வரும் இந்த பிரசார வாகனத்தை பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்கள். பலர் எந்திரத்தில் பொத்தானை அழுக்கி தான் பதிவு செய்த சின்னத்துக்கு வாக்கு பதிவாகி இருக்கிறதா? என்பதை பார்த்து செல்கிறார்கள்.
இந்த நவீன எந்திரம் மத்திய சென்னையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த தேர்தலில் வைக்கப்படுகிறது. ஓட்டு போட்ட 7 விநாடிகளில் எந்த சின்னத்துக்கு வாக்குப் பதிவாகி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.