
மகன் அறிமுகமாகும் படத்தின் மூலம் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வருகிறார். தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘விருதகிரி“ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். தொடர்ந்து அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். இதற்கிடையில் தனது இளைய மகன் சண்முக பாண்டியனை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்துவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்படத்தை சந்தோஷ் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு சகாப்தம் என பெயரிட்டுள்ளனர். தொடக்கத்தில் இப்படத்தில் தான் நடிப்பதுபற்றி முடிவு செய்யாமல் இருந்தார் விஜயகாந்த். தற்போது மகன் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் முக்கிய வேடமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதை சமீபத்தில் அவர் மேற்கொண்ட நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.
காதலை மையமாக வைத்து உருவாகவிருந்த இப்படத்தில் தற்போது விஜயகாந்த் நடிக்க உள்ளதால் அரசியல் அதிரடி வசனங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இம்மாதம் 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.