
இந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக 3டி அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கோச்சடையான். எந்திரன் படத்தை தொடர்ந்து இப்படத்திலும் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ஜாக்கிஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். ரஜினியின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கோச்சடையான் டிரைலர் ஏற்கெனவே தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதன் இந்தி டிரைலர் ஞாயிற்றுகிழமை மும்பை ‘சினிமேக்ஸ்’ வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு இந்தி கோச்சடையான் டிரைலரை வெளியிட்டு ரஜினியை வாழ்த்தி பேசினார்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுபம் கெர், அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகை கஜோல், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக விழாவின் போது அமிதாப் காலில், ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றார்.
அப்போது பேசிய அமிதாப்பச்சன், எந்திரன்’ படத்திபோது இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் போரடிப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால் நான் ரஜினியிடம் படங்களில் நடிப்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள் என்று சொன்னேன். இப்போது பாருங்கள், என்ன மாதிரியான ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறாரென்று?. சினிமா ரசிகர்களுக்கு அவரால் இன்னமும் புதிய படைப்புகளை வழங்க முடியும். இந்திய சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயமாக கோச்சடையானுக்கு முன்பும், பின்பும் என்றுதான் எழுத முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.