"மான் கராத்தே' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் "மான் கராத்தே'. இந்தப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயசீலன் என்ற வழக்குரைஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன் விவரம்:
"மான் கராத்தே' படத்தின் தலைப்பு தமிழ் வார்த்தை கிடையாது. இதில் வரும் கராத்தே என்ற சொல் ஜப்பானிய வார்த்தை ஆகும். கேளிக்கை வரி விலக்குக்கு தமிழில் பெயர் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.
விடுமுறை நாள்களிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என ஹீரோ பாடும் பாடல் ஆங்கிலத்தில் உள்ளது.
இந்தப் பாடல் பொது ஒழுக்கத்துக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் எதிராக உள்ளது. எனவே, இந்தப் படத்துக்கு வரி விலக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோரினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வணிகவரித்துறை செயலாளர், ஆணையர், படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.