
விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் 'ஐ.' இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் மிக பிரமாண்டமாக தயாரித்திருககிறார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளாராம். மேலும் அந்நியன் படத்துக்குப் பிறகு ஷங்கர்-விக்ரம் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பால் ஐ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ரஜினி நடித்த எந்திரன் பட ஆடியோ விழாவை மலேசியாவில் நடத்தியது போல், ஐ படத்தின் ஆடியோ விழாவை கனடாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதற்கு முக்கிய காரணம், ஹாலிவுட்டில் உள்ள பிரபல நடிகர்-நடிகைகளை அந்த விழாவுக்கு வரவைத்து படத்திற்கு உலக அளவிலான பப்ளிசிட்டியை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதானாம். இதையடுத்து விழாவில் கலந்து கொள்ள சிலருக்கு அழைப்பு விடுத்தபோது, ஹாலிவுட நடிகர் அர்னால்ட் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதோடு ஹாலிவுட்டின் ‘ஹேன்ட்செம்’ நாயகன் டாம் குரூஸும் கலந்து கொள்ள இருக்கிறாராம். இவைதவிர, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் விழாவில் கலந்து கொள்வார் என இன்னொரு சர்ப்ரைஸையும் அவிழ்த்துவிடுகிறார்கள். ஏற்கெனவே கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தின் ஆடியோ விழாவிற்கு ஜாக்கிசானை அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களை காக்க வைத்திருக்கும் ஐ படம் ஜீன் மாதம் திரைக்கு வரலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.