மயிலு, அமரா ஆகிய படங்களை இயக்கிய ஜீவன், தற்போது 'மொசக்குட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் புதுமுகம் வீரா நாயகனாக நடிக்கிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்றவர். நாயகியாக சாட்டை பட நாயகி மககிமா நடிக்கிறார். மற்றும பசுபதி, ஜோ மல்லூரி, செண்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் 15 நாட்கள் நடத்தி முடித்திருக்கிறார்கள். இது குறித்து மொசக்குட்டி இயக்குநர் ஜீவன் கூறியதாவது... கதைப்படி ஹீரோ பசுபதிக்கு மூன்று யானைகள் சொந்தமாக இருக்குமாம். அதனால அவர் யானைகளோடு நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக ஏராளமான வாழைப்பழத்தார் வரவழைக்கப்பட்டு பசுபதி கையாலேயே யானைக்கு கொடுத்தார். படப்பிடிப்பும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
நான்காவது நாள் இரண்டு யானை மட்டும் வந்திருந்தது, கன்டினியூட்டி இருப்பதால் கண்டிப்பாக மூன்று யானைகளும் வந்தால்தான் எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டேன்.. தயாரிப்பாளர் லோக்கல் மேனேஜரைக் கூப்பிட்டு என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அடுத்த ஒருமணி நேரத்தில்
மாற்றொரு யானையும் ஸ்பாட்டுக்கு வந்தது படப்பிடிப்பை ஆரம்பித்தோம். பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் காம்பிநேஷனில் மூன்று யானைகளையும் வைத்து நான் ஷாட் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று யானைப்பாகன்களும் ஒரு ஓரமாக நின்று, மூன்றாவதாக வந்த யானையை பார்ப்பது பசுபதியை பார்ப்பது, எங்களை பார்ப்பது இப்படியே மாறி மாறி. திகிலோடு பார்த்து மாலயாளத்தில் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
எனது இணை இயக்குநர் காவியரசனுக்கு கொஞ்சம் மலையாளம் தெரியும், யானைப்பாகன்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார், எனக்கு நெஞ்சு பகீரென்றது, மூன்றாவதாக வந்த யானை மதம் பிடித்த யானையாம். அதற்கு முந்தய இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார்களாம். சரியாகிவிட்டது என்று நினைத்து முதல் மூன்று நாட்கள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால் முற்றிலும் குணமாகவில்லை, நாங்களும் அது தெரியாமல் முன்று நாட்கள் அந்த யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
பசுபதி என்னிடம் வந்து, என்ன ரகசியமா பேசுறீங்க என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன் மனுஷன் ஆடிப்போய்விட்டார், அவரிடம் சொல்லிவிட்டு திரும்பிப்பார்த்தேன் என் உதவியாளர்கள் உட்பட யாருமே ஸ்பாட்டில் இல்லை. அதன்பிறகு அன்று பேக்கப் செய்துவிட்டோம். அடுத்த நாள் ஏர்ணாகுளத்தில் இருந்து இன்னொரு யானை வரவழைத்து மீதி ஷெட்யூலையும் முடித்துவிட்டு திரும்பினோம். அதை இப்ப நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறது.