வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் 'தெனாலிராமன்' படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்திருக்கும் இப்படத்திற்கு தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இப்படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளதாகவும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. வடிவேலு வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் மறுபுறம் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வடிவேலுக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், படத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என தெலுங்கு அமைப்பினரும், தெனாலிராமன் படத் தயாரிப்பாளர்களும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இன்றும் இரு தரப்பினரும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘தெனாலிராமன்’ திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 18-ந் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.